26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஒட்டுசுட்டானில் சட்டவிரோத நடவடிக்கை: கிராமசேவகருக்கு தொடர்பா?

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எதுவும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்-

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருவேலன் கண்டல் கிராமத்தில் மானுவி பகுதியிலே கிராம அலுவலர் ஒருவர் அனுமதிப்பத்திரம் அற்ற ஒரு காணியில் எந்தவிதமான அனுமதிப்பத்திரங்களும் பெறாது பாரியளவில் கிரவல் அகழ்வில் ஈடுபட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவில் சட்டவிரோதமாக இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் எந்தவிதமான பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அரச அதிகாரி ஒருவரே இவ்வாறு சட்ட விரோத செயல்பாட்டை மேற்கொண்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அரச அதிகாரிகளின் செல்வாக்குடனும் அரசியல் செல்வாக்குடனுமே இயற்கை வளங்கள் அழிக்கப்படும் செயற்பாடு இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் கிராம அலுவலர் ஒருவர் குறித்த சட்டவிரோத செயற்பாட்டை செய்கின்ற போது எந்த திணைக்களமும் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமையானது மக்களின் குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்காக அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு காணியிலே எந்த அனுமதிகளை பெறப்படாது பாரிய அளவில் கிறவல் அகழ்ந்து குவிக்கப்படும் வரை இதோடு சம்பந்தப்பட்ட பொலிசாரோ கனியவள திணைக்களமோ பிரதேச செயலகமோ யாருமே இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் அனுமதிப்பத்திர காணிகளில் கூட கிரவல் வெட்ட அனுமதிக்க முடியாது என்கின்ற தீர்மானம் இருக்கின்றபோது அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு காணியில் சட்டவிரோதமாக கிரவல் குவிக்கும் வரை ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கருவேலங்கண்டல் கிராம அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அயல் கிராம அலுவலரான ஜெயசுதன் அவர்களே குறித்த காணியில் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் குறித்த அகழ்வு நடவடிக்கை தொடர்பில் தன்னிடம் எந்தவிதமான அனுமதிகளும் பெறவில்லை எனவும் குறித்த காணிக்கு இதுவரை காணி ஆவணங்கள் வழங்கப்படாத ஒரு காணியாகவே காணப்படுகின்ற தாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவரை அந்த பகுதியில் எந்தவிதமான கிரவல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் தாங்கள் அனுமதி வழங்கவில்லை எனவும் அவ்வாறு இடம் பெற்றிருந்தால் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் குறித்த இடத்திற்கு பிரதேச செயலாளர் வந்து பார்வையிடுமாறு கோரப்பட்ட போதும் அவர் இன்று வரை சென்று பார்வையிடவில்லை எனவும் தெரியவருகின்றது. ஏற்கனவே குறித்த கிராம அலுவலர் இரவு நேரத்தில் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை தன்னுடைய வீட்டுக்கு ஏற்றி சென்றபோது பொலிஸாருக்கும் பிரதேச செயலாளருக்கும் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே இவ்வாறு அவருடைய அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஊழியர் என்ற காரணத்தினால் அவர் இந்த விடயத்தை மூடி மறைக்க முற்படுகிறாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேவேளை குறித்த காணியில் குவிக்கப்பட்டிருக்கின்ற கிரவல் சட்டவிரோதமாக அகலப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய புதிதாக அமைக்கப்பட்ட வீதிகள் ஊடாக இவற்றை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டால் தமது வீதிகள் அனைத்தும் சேதம் ஆகக் கூடிய நிலைமை இருப்பதாகவும் எனவே அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு தாம் அனுமதிக்கமாட்டோம் என குறித்த பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெரிவிக்கின்றார்.

ஆக மொத்தத்தில் இவ்வாறு அனைத்து தரப்புகளுக்கும் எந்தவிதமான தகவலும் தெரியாமல் திருட்டுத்தனமாக இடம்பெற்ற இந்த முயற்சியை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எனவே இவ்வாறு இயற்கை வளங்கள் அழிப்பது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சூழலியலாளர்ளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

Leave a Comment