பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதியாகியுள்ளது
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். மேலும் இப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதையும் வென்றது.
‘ஒத்த செருப்பு’ படத்துக்குப் பிறகு தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் பார்த்திபன். ‘இரவின் நிழல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷொட்டில் எடுக்கப்படவுள்ளது. உலக அளவில் பலரும் இந்த முயற்சியைச் செய்திருந்தாலும், ஆசியாவில் பார்த்திபன்தான் இந்த முயற்சியை முதலில் முன்னெடுக்கிறார்.
இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இதை பார்த்திபன் தனது ட்விட்டர் அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ‘இரவில் நிழல்’ படத்தில் தான் பணிபுரிவதைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ துணுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பார்த்திபன் அத்தகவலை உறுதி செய்துள்ளார்.