சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வந்தவர் டாக்டர் கோபாலன். ‘10 ரூபாய் டாக்டர்’ என்ற அடைமொழியுடன் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வந்தவர் டாக்டர் கோபாலன். ‘10 ரூபாய் டாக்டர்’ என்ற அடைமொழியுடன் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
மன்னார்குடியை சேர்ந்த இவர், 1966ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தார். சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ். முடித்த பின்னர் ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலை மற்றும் ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் பணியாற்றினார். 2002இல் அரசு ஸ்டான்லி வைத்தியசாலையில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி நன்மதிப்பை பெற்ற இவர், 1969ஆம் ஆண்டு முதல் சென்னை வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை வைத்து, 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். 1976ஆம் ஆண்டு முதல் 2 ரூபாயில் இருந்து 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர் மக்களாகவே சில்லரை தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்தனர். மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த டாக்டர் கோபாலன், உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார்.
வடசென்னையில் ஏற்கனவே 5 ரூபாய் டாக்டர் ஜெயசந்திரன், வியாசர்பாடியில் 10 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் ஆகியோர் மறைந்த சோகமே மறையாத நிலையில் தற்போது 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் கோபாலனும் மறைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் கோபாலன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார்.