ஜோர்தான் அரண்மனைக்கு ஏற்பட்ட நெருக்கடி தகர்க்கப்பட்டு, சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஒன்று விட்ட சகோதரர் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டதும் தாம் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக அவர் சொன்னார்.
முன்னாள் இளவரசர் ஹம்ஸா பின் ஹுசைன் அரண்மனையில் குடும்பத்தினருடன் என்னுடைய பாதுகாப்பில் இருக்கிறார். ‘அரண்மனைக்கு ஏற்பட்ட பிரச்சினை தீர்ந்து விட்டது’ என்றார் அவர்.
ஜோர்தான் அரச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை மத்திய கிழக்கு நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இஸ்ரேல்-பாலஸ்தீன சர்ச்சைக்குரிய வட்டாரத்தில் ஜோர்தான் இடம்பெற்றுள்ளது. இரண்டு மில்லியன் பாலஸ்தீன அகதிகளும் அவர்களுடைய சந்ததியினரும் ஜோர்தானில் வசித்து வருகின்றனர்.
ஜோர்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 1994ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் அது அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. சிரியா, ஈராக் நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருந்தாலும் ஜோர்தான் அமைதியைக் கடைப்பிடித்து வருகிறது.
‘ஒரு சகோதரராக குடும்பத்தின் பாதுகாவலராக மன்னராக எனக்கு ஏற்பட்ட வலியையும் அதிர்ச்சியையும் ஒப்பிட வேறு எதுவும் இல்லை,” என்று அரச குடும்ப பிரச்சினைக்குப் பிறகு முதல் முறையாக வெளியிட்ட சிறிய அறிக்கையில் மன்னர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்ஸா வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவருடன் 16க்கும் மேற்பட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் துணைப் பிரதமர் அய்மான் சஃபாடி தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு ஹம்ஸா கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மன்னருக்கு விசுவாசத்துடன் இருப்பேன் என்று ஹம்ஸா தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஹம்ஸா காணொளி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
காலஞ் சென்ற மன்னர் ஹுசைன் மற்றும் அவருக்குப் பிடித்தமான மனைவியான அரசியார் நூர் தம்பதியரின் கடைசி மகன் ஹம்ஸா.
இங்கிலாந்தில் படித்து அவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும் அவர் படித்துள்ளார்.
மன்னரின் அன்புக்குரிய மகனாக விளங்கிய ஹம்ஸா 1999ல் பட்டத்து இளவரசராக பெயர் குறிப்பிடப்பட்டார்.
ஆனால் மன்னர் ஹுசைன் மறைந்த நேரத்தில் ஹம்ஸா இளமையாகவும் அனுபவமற்றவராகவும் இருந்ததால் அவர் மன்னராக முடி சூட்டப்படவில்லை. அவருக்குப் பதிலாக அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல்லா அரியணை ஏறினார்.
2004ல் ஹம்ஸாவின் இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டது.