யுத்தம் முடிந்து 10 வருடங்களாகி விட்ட போதும் பொலிசாரின் பயப்பீதி அடங்கவில்லையென்பதையே மணிவண்ணன் கைது புலப்படுத்துகிறது என்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று யாழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வழக்கின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட மணிவண்ணன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு பல மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்தனர்.
இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து, நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவருக்கு எதிராக இலங்கை தண்டனை சட்டக்கோவை பிரிவு 120, 332, 343 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்செயல்களை புரிந்துள்ளார் என்றும், அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டுமென்றும் சொல்லியிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் 5 பேருக்கு புலிகளின் காவல்த்துறையினரின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாகவும், அவர்கள் வீதிப்போக்குவரத்து கடமைகளில்- பொலிசார் செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபட்டார்கள் என்றும் அறிக்கை சமர்ப்பித்தனர்.
மணிவண்ணன் சார்பாக என்னுடன் 20, 25 இற்கும் அதிகமான சட்டத்தரணிகளுடன் ஆஜராகி, மாநகரசபை கட்டளைச்சட்டத்தில் பிரிவுகள் 73, 78,83 ஆகியவற்றின் கீழ் வீதிகள் தொடர்பான விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதை நீதிவானிற்கு சுட்டிக்காட்டினேன்.
வீதியை மறிப்பது, தொல்லைகளை ஏற்படுத்துவது, ஊறுகள் விளைவிப்பதை கட்டுப்படுத்துவதற்கு மாநகரசபைக்கு பூரண அதிகாரமுள்ளது.
பிரிவு 40 இன் கீழ் மாநகரசபைகளை கடமைகளை செய்வதற்கு ஊழியர்களை நியமிக்கவும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
2 மாதங்களின் முன்னர் வரிகளை அறவிடுவதற்காகவும், முக்கிய கடமைகளை நிறைவேவற்ற 5,6 பேரை நியமிக்க தீர்மானமும் நிறைவேற்றியிருந்தது. இதன்படி, பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் பிரிவு 14.3இன் கீழ் முதல்வர்தான் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்.
அநடத அடிப்படையில் மாநகரசபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் தீரமானத்தைத்தான் அவர் செய்தார். அது சட்டப்படி செய்த விடயம்.
புலிகளின் காவல்த்துறையின் சீருடையை போன்ற உடை என சொல்வதெல்லாம் எந்த நீல சேட்டை கண்டாலும், எல்லா பற்றைக்கு பின்னாலும் ஏதோ ஒரு பூதம் இருப்பதாகவும், ஒரு தசாப்தகாலத்தின் பின்னரும் பொலிசார் பயந்து கொண்டு, குலைநடுங்கியிருப்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளதே தவிர, வேறு எந்த குற்றச்செயலையும் வெளிப்படுத்தவில்லையென்பதை நீதிவானிற்கு எடுத்துக் கூறினேன்.
ஆண்கள் அணியும் பொதுவான நிறம் நீல நிறம். காக்கியுடையை அணிந்தால் பாதுகாப்பு பிரிவின் உடையை அணிந்து விட்டார் என சொல்வார்கள். கொழும்பு மாநகரசபையில் வாகன சிட்டை அறவிடுபவர்கள் இதேபோன்ற ஒரு ஆடையைத்தான் அணிந்திருப்பார்கள்.
நீதிவான் பொலிசாரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். ஊழியர்களின் உடையில் புலிகளின் இலச்சினை உள்ளதா என. பொலிசார் இல்லையென்றார்கள்.
அதற்கு மேலதிகமாக நாம், அவர்களுடைய சீருடையில் இருந்தது யாழ் மாநகரசபையின் இலச்சினை. வேறு மாநகரசபையினால் செய்ய முடிந்ததை ஏன் யாழ் மாநகரசபையினால் செய்ய முடியாது. ஒரேநாடு ஒரே சட்டம் என கூரையிலிருந்து கூவிக்கொண்டிருந்தால் போதாது. அது நடைமுறையில் இல்லையென்பதை பொலிசார் இன்று நடைமுறையில் காண்பித்துள்ளனர்.
சகல வாதங்களையும் கேட்ட நீதிவான், மணிவண்ணனிற்கு 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்து, யூன் மாதம் 26ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.