சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், பிராந்திய தலைவர்கள் என பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பி தீர்வு கிடைக்கும் வரை போராடபோவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அந்த போராட்டத்திற்க்கு வலுசேர்க்கும் வகையில் சம்மாந்துறை மக்களிடம் கையெழுத்து பெரும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடுமையான உஷ்ணநிலை அம்பாறையில் இருந்தாலும் மக்கள் இந்த கையெழுத்து வேட்டையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தனது ஆதரவை வழங்கி வருகின்றனர். மக்களிடமிருந்து பெறப்படும் இந்த கையெழுத்துப்பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், அம்பாறை அரசாங்க அதிபர் போன்றோருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.