வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வானில் வந்து வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் வாள்களுடன் புகுந்து குழுவொன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியிருந்தது.
யாழ்ப்பாணம், புறநகர் பகுதியை சேர்ந்த யுவதியொருவர் தனது பெற்றோரின் சம்மதமின்றி தனது காதலனை கரம்பிடித்திருந்தார். அவர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வவுனியா, மூன்றுமுறிப்பில் வாடகைக்கு வீட்டை பெற்று தங்கியிருந்தனர்.
அவர்களை தேடிச்சென்ற குழுவினரே அட்டகாசம் செய்தனர்.
இந்நிலையில் அக்குழுவினர் பயணித்த வாகனத்தின் இலக்கம் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் கவனத்திற்கு குறித்த சம்பவம் தொடுர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினராலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவரும் கைது செய்யப்படாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டும் கைது நடவடிக்கை இடம்பெறாத நிலை காணப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வாகன இலக்கம் தரப்பட்டது. அவர்கள் யாழ்பபாணம் நோக்கி செல்வதாகவும் கூறப்பட்டது.
நான் உடனடியாக குறித்த இலக்கத்தினை பொலிஸாருக்கு வழங்கி வானை மறித்து அதனுள் உள்ளவர்களை கைது செய்யுமாறு பொலிஸரிடம் கேட்டிருந்தேன்.
எனினும் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கைது நடவடிக்கை இடம்பெறாமையினால் பொலிஸ் மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன் வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு விசேட குழுவொன்று அனுப்பப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.