மியன்மாருக்கு எதிராக விதிக்கப்படும் தடைகளால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. எனினும், பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் மியன்மாருக்கு எதிரான தடைகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தை இராணுவம் கவிழ்த்தது. அப்போது முதல் அந்நாட்டின் மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்து வருகின்றன. மியன்மார் மக்களும் ஒவ்வொரு நாளும் இராணுவத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை அன்று முக்கிய நகரமான யங்கூனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் சிவப்பு நிற சாயத்தால் ‘ரத்தம் இன்னமும் காயவில்லை’ உள்ளிட்ட முழக்க வரிகளை எழுதியிருந்தனர்.
போராட்டக்காரர்களை அடக்க இராணுவம் கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. இதுவரை, குழந்தைகள் உட்பட 570 பேரை இராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது. 3,500க்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் மியன்மாருக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது என்று ரஷ்யா கூறியுள்ளது. உலக நாடுகளின் தடைகளால் இராணுவம் தன்னுடைய நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும். மக்களும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக்குவர். இதனால் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று ரஷ்யா தெரிவித்தது.
ஆனால் இராணுவம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தவில்லை.
மியன்மாருக்கு அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
கடந்த மாதம் நேப்பிடாவில் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவத் தளபதி ஜெனரல் மின் அவுங் ஹிலைங்கை ரஷ்ய துணை தற்காப்பு அமைச்சர் சந்தித்தார்.
இது, ராணுவ ஆட்சியை அங்கீ கரிப்பது போல் உள்ளது என்று ரஷ்யாவை உலக நாடுகள் சாடியுள்ளன.
இதற்கிடையே வர்த்தக நகர மான யங்கூனில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான தொழிற்சாலையை தீயிட்டுக் கொளுத்தி சீனாவின் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். அங்கு இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.