போதைப்பொருள் பாவனை, திருட்டு, இடையூறு ஏற்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சிங்கப்பூர் மொடல் அழகி டெனஷாருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெப்பி வேலரி டெனஷார் லோங் எனும் அந்த மொடல் அழகிக்கு 2019ஆம் ஆண்டிலும் போதைப்பொருள் உட்கொள்வது உள்ளிட்ட குற்றங்களுக்காக 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது 35 வயதாகும் லோங், 2019ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனையின் போது, தண்டனை காலத்தை முழுமையாக கழிப்பதற்கு முன்னதாகவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் அவர் குற்றச் செயல்கள் ஏதும் புரியாமல் இருக்குமாறு ஆணையிடப்பட்டிருந்தார்.
அந்த ஆணையை மீறியதற்காக இப்போது அவர் 72 நாட்கள் மேலதிகமாக சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
2019ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறுநீர்ப் பரிசோதனைக்காக 6 தடவை முன்னிலையாகத் தவறியது உட்பட 9 குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாக ஐந்து நாள் விசாரணைக்குப் பிறகு மாவட்ட நீதிபதி எட்டி தாம் தெரிவித்தார்.
மேலும், கண்காணிப்பு அதிகாரியின் அனுமதி இன்றி 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி சட்டவிரோதமாக அவர் வெளிநாட்டுக்குச் சென்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட இடமான ஜூரோங் போலிஸ் தலைமையகத்தில் உள்ள மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒரு காணொளியை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதியன்று லோங் பதிவு செய்தார்.
தாய்லாந்தின் பிளேபாய் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இடம் பிடித்த லோங், பிரிட்டிஷ் இசை சஞ்சிகையின் ‘டிஜே மேக்’ பட்டியலில் 87வது இடம் பிடித்திருந்தார்.




