31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மிருசுவில் காணி அளவீடு முயற்சி முறியடிப்பு: ஏ9 வீதியை தடைசெய்த போராட்டக்காரர்கள்!

தென்மராட்சி, மிருசுவிலில் தனியாருக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்காக நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைகூடவில்லை.

இதன்போது, மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஏ9 வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.

மிருசுவில் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணி 40 ஏக்கர பரப்பளவிலானது. அது விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்த காணியென குறிப்பிட்டு, இராணுவத்தினர் அங்கு முகாம் அமைத்துள்ளனர்.

இது தொடர்பில் காணி உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில், காணியில் முகாம் அமைக்க இராணுவத்தினருக்கு தடையில்லையென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில்  மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அளவீட்டு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இராணுவ முகாம் வாசலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் நிலைப்பாட்டை மதித்து, அளவீடை மேற்கொள்ளாமல் திரும்பி செல்வதாக பிரதேச செயலாளர் அறிவித்து, இடத்தை விட்டு சென்றார்.

இதன்போது, நிலஅளவை திணைக்கள பொறுப்பதிகாரி இராணுவத்தினருடன் முகாமிற்குள் நுழைந்து விட்டார். இதையடுத்து, நிலஅளவை திணைக்களத்தின் ஏனைய தரப்பினர் முகாமிற்குள் நுழையாமலும், உள்ளே சென்ற அதிகாரியை வெளியே வர வலியுறுத்தியும் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 20 நிமிடங்கள் ஏ9 வீதி போக்குவரத்து தடைப்பட்டது.

இதையடுத்து, உள்ளே சென்ற அதிகாரி வெளியே வந்தார்.

நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்ற பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை, அந்த காணி அளவீட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று, நிலஅளவை திணைக்களத்திற்கு எழுத்துலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், சாவகச்சேர பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞரணியை சேர்ந்த க.குணாளன் உள்ளிட்டவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!