கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பங்களாதேஷில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவை போலவே, அண்டை நாடான பங்களாதேஷிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுவரை கொரோனா உயிரிழப்பு 9,000ஐ கடந்து விட்டது.
இந்த நிலையில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த நாட்டு அரசு நாடு முழுவதும் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு இன்று திங்கட்கிழமை தொடங்கி அடுத்த 7 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் பெரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பல வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திடீர் முடக்க அறிவிப்பையடுத்து தலைநகர் டாக்காவில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முண்டியடிக்கிறார்கள்.
தனியார் கார்கள், நிறுவன போக்குவரத்து, பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அல்லது மினி பஸ்கள், பொருட்கள் நிறைந்த வாகனங்கள் மற்றும் கட்டுமான வாகனங்கள் வீதிகளில் அனுமதிக்கப்படும்
பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், அவசர சேவை வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், மருந்து, நிவாரண பொருட்கள், செய்தித்தாள்கள் மற்றும் ஆடை பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட வாகனங்கள் வீதிகள், நீர்வழிகள் மற்றும் ரயில்வேயில் செல்ல அனுமதிக்கப்படும்.
தனியார் வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை, தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், அனைத்து நடமாட்டங்களும் மறுநாள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடை செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.