வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ளார்.
அதன்படி, மேற்கொள்ளப்படும் கலாசார, மத சடங்குகளை முடிந்தவரை குறைப்பது தொடர்பான நடைமுறைகள், புதுவருட விளையாட்டுக்களில் ஒவ்வொரு விளையாட்டின் போதும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், புத்தாண்டின் போது பாதுகாப்பான பொருட் கொள்வனவு, பயணங்கள் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்டை மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை குறைக்கவும், பரிமாற்ற விருந்தளிப்புகளை மட்டுப்படுத்தவும் மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாரம்பரிய விளையாட்டுகளை மட்டுமே நடத்தவும் பரிந்துரைத்துள்ளார்.
இம்முறை புதுவருட விளையாட்டுக்களை தவிர்க்குமாறும் வீடுகளில் உள்ளவர்கள் மாத்திரம் இணைந்து விளையாட்டு போட்டிகள், மரபு நிகழ்வுகளில் ஈடுபடுமாறும், கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த அவர் பரிந்துரைத்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்ந்தும் தொடர்பை பேணியவர்களுடன் மாத்திரம் குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
அத்துடன் புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குறித்த வழிகாட்டல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த புத்தாண்டின் போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பொறுத்தமற்றதெனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




