அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக ஊர் ஊராகச் சென்று மன்னிப்பு கேட்கிறேன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
நான் அரசியலுக்கு வராமல் அதுக்கெல்லாம் ஆள் இருக்கிறார்கள் என நினைத்து நான் நமது வேலையைப் பார்ப்போம் என எனது வேலையை மட்டும் பார்த்தேன். அது தவறு என்பது 25 ஆண்டுக்கு கழித்து புரிந்து கொண்டேன். அதற்காகத்தான் தற்போது ஊர் ஊராகச் சென்று மன்னிப்புக் கேட்டு கொண்டு வருகிறேன்.
இப்போது ஒரு முடிவோடு வந்திருக்கிறேன். கட்சி தொடங்கியபோது மதுரையில் சொன்னேன், என்னுடைய எஞ்சிய வாழ்நாட்கள் எல்லாம் என் மக்களுக்குக்காகத்தான் எனச் சொன்னேன். இந்த முடிவோடுதான் வந்திருக்கிறேன்.
இது வெறும் வசனமில்லை. ஒவ்வொரு அடியிலும் முயற்சியிலும் உங்களுக்குத் தெரியும். இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களைக் கொண்டு வரவேண்டியது எங்களது பொறுப்பு. அனைத்து வார்டுகளிலும் தங்குதடையற்ற குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டியது அவரது கடமை.
அவருக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டுமோ அரசு ரீதியாக, அரசியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக செய்வோம். குடிநீர் வசதி இல்லை என தோளை குலுக்கிக்கொண்டு போகும் அரசியல்வாதி இனி உங்களுக்குத் தேவையில்லை.
நீங்க நல்லாத்தான் பேசுறீங்க. ஆனால் காசைக்கொடுத்து ஜெயித்துட்டு போய்விடுவார்கள் எனச் சொல்கிறார்கள்.அப்படிங்கிறாங்க.
காசை கொடுத்தா கூட்டம் அப்படியே போய்விடும் எனச் சொல்கிறார்கள். நான் இல்லை என்கிறேன். இந்தக் கூட்டம் காசு கொடுத்து சேர்த்ததல்ல. ஏன் நீங்கள் காசை வாங்கக்கூடாதுன்னு இந்தக் கூட்டத்திடம் சொல்லத் தேவையில்லை. ஆனால் மற்றவர்களிடம் சொல்வோம். காசு வாங்குவதால் உஙகளது ஏழ்மை போகவே போகாது.
அன்று ஒருநாள் மட்டம் வாழ்நாளுக்கு சாப்பாடு போட்டதாக அர்த்தமில்லை. அஞ்சு வருசத்திற்கு ஒருமுறை 5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு உங்களது வாழ்க்கையை குத்தகைக்கு எடுக்கும் கூட்டம். இதை மாறி மாறி செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் அதை நாங்கள் செய்ய வரவில்லை. தமிழக அரசியலைப் புரட்டிப்போட வந்திருக்கும் கட்சி ம.நீம கூட்டணிக் கட்சி.
இந்தத் தொகுதியில் விளையாட்டு மைதானம் நம் பிள்ளைகளுக்கு அமைக்கப்பட வேண்டும். உலக அளவிலான சாம்பியன் இங்கிருந்து தோன்றலாம், பேருந்து வசதிகள் இல்லாத பகுதிக்கு பேருந்து வசதி வந்து சேரும. நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. அதை வெகுதீவிரமாகச் செய்யும்.
வழக்கமாக திமுக, அதிமுக காலகாலமாக செய்துவரும் ரவுடித்தனம் பண்ணுவாங்க. ரவுடித்தனத்தை நேருக்கு நேராக கண்ணால் பார்த்தால் அதைச் செய்ய மாட்டாங்கள். இந்த வேலை இங்கு நடக்காது. நம்மாட்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன், வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை.
ஊழல் கட்சி ஆண்டு கொண்டிருக்கிறது. அதற்கு மாற்று மற்றொரு ஊழல் கட்சியல்ல. அதற்கு மாற்று நேர்மையான கட்சிதான்.அதே மாதிரி வன்முறையாளர்களை ஒடுக்குவதற்கு சட்டத்தைத்தான் கையிலெடுக்க வேண்டும். இதற்காக வரும் என நினைத்துத்தான் மநீம வழக்கறிஞர் படையை பலமாக வைத்தேன். வெற்றியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்சியின் வெற்றிக்கான காரணம் என்னவென்பது கட்சிப் பெயரில் இருக்கிறது. அதை மக்கள்தான் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்.
புதிதாக ஓட்டுப்போட வருகிறவர்கள் புதிதாக அரசியலைப் புரட்டிப்போட வருகிறார்கள். அதை அவர்கள் செய்து காண்பிக்க வேண்டும். உங்களுக்கு கடமை இருக்கிறது. அதை அமைதியாக செய்து காட்டுங்கள். வன்முறையை விட அழுத்தமான தீர்ப்பு ஓட்டுப்போடுவதுதான். ஓட்டுப்போட்டால் வன்முறையாளர்கள் ஓடிப்போய்விடுவார்கள்.
மத நல்லிணக்கம், சிறுபான்மையினர் பாதுகாப்பு இதையெல்லாம் நிஜமாகவே செய்யப்போகும் கட்சி மநீம. எப்படி நம்புறதுன்னு கேட்காதீர்கள். என்னைப்பாருங்கள். யார் யாருக்கு குரல் கொடுத்திருக்கிறேன் என்பதே சாட்சி. இளைஞர்கள், பெண்களே, மனசாட்சி உள்ளவர்களே, நேர்மையானவர்களே உங்கள் சின்னம் என்னவென்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். இது உங்கள் சின்னம். நான் உங்கள் கருவி, மக்கள் பணி செய்ய வந்திருக்கிறேன். எனது கரத்தை வலுப்படுத்துங்கள்.
நான் காந்தியின் ஏ டீம். அதற்கு சின்ன உதாரணம் சொல்கிறேன், நான் நேற்றுமுன் தினம் புதுச்சேரியில் இருந்தேன். சென்னைக்கு, கோயம்புத்தூர் போய்விட்டு உங்களுக்காக மதுரை வந்திருக்கிறேன்.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். அங்கு மாண்புமிகு பிரதமர் வந்திருக்கிறார். நான் ஏன் காந்தியின் ஏ டீம் எனச் சொல்கிறேன் என்றால் புரிந்து கொள்ள வேண்டும். நவகாளி படுகொலை மாறி மாறி இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தது.
அப்போ வெள்ளைக்காரனே உள்ளே போக பயந்த நேரத்தில் சட்டைகூட போடாமல் அமைதி காத்தவர் காந்தி. அதற்கு தைரியம் வேண்டும். 144 போட்டு மற்றவர்கள் யாரும் பிரச்சாரம் பண்ணாத நேரத்தில் நான் பிரச்சாரம் பண்ணுவேன் எனச் சொல்வதற்கு பெயர் வீரமல்ல. ஆளை விட்டு அடிப்பதற்கு பெயர் வீரமல்ல. நீ என்ன அடித்தாலும் வெல்வேன் எனச் சொல்பவன்தான் வீரன்.
அப்படி சொல்லும் துணிவு எனக்கு இருக்கிறது.
இந்நாள் நமது. அதை கைவசப்படுத்துவோம் நாளை நிச்சயம் நமதாகும். ஏப்ரல் 6 உங்கள் சின்னம் என்னவென்று தெரியும்.இந்த டார்ச் லைட்டை கொண்டுபோய் சேர்க்க 5 வருஷம் ஆகுமுன்னு சொன்னார்கள். 18 நாள் சேர்ததோம். ஏப்ரல் 6ம்தேதி நீங்கள் கொடுக்கும் தீர்ப்பு தமிழக அரசியலை திருப்பிபோட வேண்டும். அதற்கான வேலையைச் செய்யுங்கள்.
நமக்கு வேலை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள் அயராது செய்யுங்கள் வெற்றி நமதாகும். அதற்கு மக்கள் சாட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது சமத்துவ மக்கள் கட்சி ராதிகா சரத்குமார் தனி வேனில் நின்று ஆதரவு திரட்டினார்.