புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகளை நடத்த பொதுமக்களை அனுமதிக்கும் முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புத்தாண்டு தொடர்பான விழாக்களை நடத்துவதற்கான பரிந்துரைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த பரிந்துரைகள் குறித்து தொழில்நுட்பக் குழு இறுதி முடிவு எடுக்கும் என கூறினார்.
இருப்பினும், பண்டிகை காலங்களில் பயணத்தை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. மேலும் கொரோனா தொற்றின் மற்றுமொரு அலையை தடுக்க பண்டிகை காலங்களில் நாடு முழுவதும் விசேட திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.