யாழ்ப்பாண மாநகரப் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தற்போது, பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அண்மை நாட்களில் கண்டறியப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் அறிகுறியற்றவர்கள்.
கொரோனா பரவலை தடுக்க சில, பல நடவடிக்கைகளை வடக்கு சுகாதார திணைக்களம், கொரோனா தடுப்பு செயலணி எடுத்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பை கேள்விக்குட்படுத்துவது நமது நோக்கமல்ல. ஆனால், தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் உள்ள- சமூகத்தின் பல மட்டங்களிலும் எழுப்பப்படும் கவலைகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.
கொரோனா சமூக பரவல் கட்டத்தில் இருந்தால்- லொக் டவுன் அல்லது, மக்களின் விழிப்புணர்வினாலும், சுகாதார நடைமுறையினாலுமே அதை கட்டுக்குள் கொண்டு வருவது என்ற இரண்டு தெரிவுகளே, அதனை கையாள்பவர்களிடம் இருக்கும். ஆனால், கொரோனா தொற்றினால் நாட்டை முடக்குவதால் பலனில்லையென்ற கொள்கை முடிவை அரசு வைத்துள்ளது.
ஆகவே, இரண்டாவது தெரிவையே மேற்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் அடிமட்டத்திலுள்ள மக்களும் வாழ வேண்டுமென்றால், இதுவே பொருத்தமான நடவடிக்கை.
அரச, அரச செல்வாக்கு மிக்க தனியார் நிறுவனங்களில் கொரோனாவின் பெயரால் கைவைக்க முடியாது என்பதே, சுகாதார அதிகாரிகளிற்கு உத்தரவிடப்படாத கட்டளையாக இருக்கும். நாடும், பொருளாதாரமும் இயங்க வேண்டுமென்றால் இது பொருத்தமான நடவடிக்கைதான். ஆனால், இந்த இரண்டும் இயங்க வேண்டுமென்பதற்காக ஏழைகள் இயங்கக்கூடாதென்ற புதுவிதியை நாம் ஏற்படுத்தக்கூடாது. ஏனெனில், லொக் டவுன் பொருத்தமில்லையென் முடிவே, அந்த பொருளாதார அடிமைகளை மையப்படுத்தி ஏற்படும் தீர்மானமே.
ஆனால், தற்போது வடக்கில் என்ன நடக்கிறது?
தென்னிந்திய சினிமாவில் இரண்டு புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்கள் உள்ளன. ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி, வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற அந்த வசனங்கள், நமது கொரோனா கட்டுப்பாட்டை பார்க்கையில் நினைவுக்கு வருகிறது.
யாழ் நவீன சந்தைக்குள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்பட்டுள்ளது.
நகரின் ஒரு சிறிய பகுதி மூடப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் தொற்று இல்லையா?. வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான இரு மருங்கு கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதற்கு அப்பால் 100 மீற்றர் தொலைவில் தியேட்டர் இயங்குகிறது. யாழ்ப்பாணத்தின் பெரிய பல்பொருள் அங்காடி இயங்குகிறது. யாழ்ப்பாணத்தின் பெரிய நட்சத்திர ஹொட்டலில் கொழும்பிலிருந்தும் ஆட்கள் வந்து கருத்தரங்கு நடக்கிறது.
மூடப்பட்ட பகுதிகளில் அரச நிறுவனங்கள் இயங்குகிறது. தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிதி நிறுவனங்கள் எல்லாம் தென்னிலங்கையை சேர்ந்தவை.
நமது சுகாதார நடைமுறைகள் ஏன் உள்ளூர் மக்களை மட்டும் முடக்க வேண்டும்?
இதுதவிர, யாழ் மாநகரநபை முதல்வர் வி.மணிவண்ணன் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
தொற்றுடன் அடையாளம் காணப்படுவதற்கு முதல்நாள் வரை அவர் நீதிமன்றங்களிற்கு சென்றார். நிகழ்வுகளிற்கு சென்றார். சட்டத்தரணிகள் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு கொரோனா தொற்றாளருடன் நேரடி தொடர்பில் இருந்ததாக சட்டத்தரணிகள் முடக்கப்படவில்லை.
ஆனால், முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ளவர்கள் பிசிஆர் சோதனை முடிந்த பின்னரே வர்த்தக நிலையங்களில் பணியாற்ற, வர்த்தக நிலையங்களை திறக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் பெருமளவானவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு குவிந்தார்கள்.
திண்ணை விடுதியில் இரண்டு நாட்கள், யுஎன்டிபியினனால் ஒரு வதிவிட பயிற்சி நடத்தப்பட்டது. வடக்கின் பல உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள், மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர்கள், அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மணிவண்ணனும் கலந்து கொண்டார். ஆனால், அதில் கலந்து கொண்ட மிகச்சிலர்- அதுவும் யாழ் மாவட்டத்திற்கு வெளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்கள். யாழ் மாவட்டத்தில் கணிசமானவர்கள் தனிமைப்படுததப்படவில்லை.
இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு வெளியிலுள்ள சுகாதார அதிகாரிகள் சில நெருக்கடிகளை சந்திப்பதை தமிழ்பக்கம் அறிந்தது. அதாவது, யாழ்ப்பாணத்திற்குள் யாரும் தனிமைப்படுத்தப்படாத நிலையில், வெளிமாவட்டங்களில் எம்மை ஏன் தனிமைப்படுத்துகிறீர்கள் என அந்த பகுதிகளிலுள்ளவர்கள் தம்மை கேள்வி கேட்பதாக, யாழ் மாவட்டத்திற்கு வெளியிலுள்ள சுகாதார அதிகாரிகள் நெருக்கடியை சந்திக்கிறார்கள்.
நாம், மேலே குறிப்பிட்டதன் பொருள்- அவர்களையெல்லாம் தனிமைப்படுத்த வேண்டுமென்பதல்ல. வசதி, அதிகாரம் படைத்தவர்களிடம் காண்பிக்கப்படும் கனிவும், சலுகையும் வசதி, அதிகாரமற்றவர்களிடமும் காண்பிக்கப்பட வேண்டும்.
வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதை போல, அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு கொரோனா தொற்றாதா? நமக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
அதிகாரத்தில் உள்ளவர்களை முடக்கினால் நிர்வாகம் இயங்காது, வைத்தியசாலையை முடக்கினால் சுகாதாரத்துறை இயங்காது என்பதெல்லாம் சரி. அதிகாரத்துளள்வர்கள், வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களை விட தொற்றிற்குள்ளாகும் வீதம் குறைவு என்பதெல்லாம் சரிதான். ஆனால், உலகின் பல நாட்டு தலைவர்களும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். காற்றை அடைத்து நம்மால் வைரஸை கட்டுப்படுத்த முடியாது.
பொருளாதாரம் இயங்க வேண்டும். அரச நிர்வாகமும் இயங்க வேண்டுமென்றால், அன்றாடம் உழைப்பவர்களும் இயங்க வேண்டுமென்பதில் என்ன தவறு?