ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை உருவாகுகின்ற இந்தச் சூழ்நிலையிலே பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தையும், ஊடகங்களையும் பேணிப் பாதுகாப்பதிலே ஆட்சியாளர்கள், சமூகத்தினர் மட்டுமல்ல, ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கும் ஒரு பெரும் பங்கு இருக்கின்றது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற பரிணாமம் என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலைதளங்களில் இருக்கின்ற ஊடகங்களில் வருகின்ற செய்திகள் உடனுக்குடன் வருவதாக இருந்தாலும், அதன் உண்மைத்தன்மை பற்றி பலருக்கும் கேள்விகள் இருக்கின்றது. ஒரு பொறுப்போடு செய்திகைளப் பிரசுரிக்கத் தேவையில்லை என்ற வகையில் இணையவளி செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அச்சுப் பதிப்பினாலே ஒரு ஊடகம் வெளிவருகின்ற போது அது சம்மந்தமான சட்டங்கள் எமது நாட்டில் ஊறிப்போயிருக்கின்ற காரணத்தினாலே எதையும் அச்சிட்டு பிரசுரித்துவிட முடியாது.
இன்றைய கால கட்டத்திலே ஊடகம் மிக மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. இன்றைக்கு விசேடமாக இந்த அரசாங்கத்தின் கீழே துணிவோடு உண்மையை எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றது. ஊடக சுதந்திரம் திரும்பவும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது. ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் எப்படியாக இருந்தது என்று 2015ம் ஆண்டுக்கு முன்னர் எங்களுக்குத் தெரிந்திருந்தது. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், இன்னும் பலர் நாட்டை விட்டு ஓடினார்கள். இன்றைக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெருமையோடு சொல்லுகினற விடயம் அவருடைய காலத்தில் எந்த ஊடகவியலாளரும் தாக்கப்படவில்லை என்பதாகும். அதை அவர் பெருமையாகச் சொல்லும் அளவிற்கு உண்மையும் இருக்கின்றது.
ஆனால் தற்போது நிலைமை மாறுகின்றது என்கின்ற ஒரு அச்சம் எழுந்துள்ளது. பழைய நிலைக்குச் செல்லாமல் ஊடக தர்மத்தைக் காத்து ஊடகங்களைப் பேணிப் பாதுகாப்பதிலே ஆட்சியாளர்கள், சமூகத்தினர் மட்டுமல்ல, ஊடகத்துறையிலே இருக்கின்றவர்களுக்கும் ஒரு பெரும் பங்கு இருக்கின்றது. உண்மையான, சரியான செய்தியைச் சரியான கோணத்தோடு அதனை வெளியிடுகின்ற போது அந்த ஊடகத்திற்கும் அந்தச் செய்திக்கும் ஒரு மதிப்பு இருக்கும்.
எனவே ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை உருவாகுகின்ற இந்தச் சூழ்நிலையிலே இன்று வெளியிடப்படுகின்ற பரிமாணம் என்ற பத்திரிகையும் உண்மையான, சரியான ஊடகதர்மத்திற்கு உகந்ததான செய்திகளை வெளியிடும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன், முசாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-பா.டிலான்-