கிழக்கு மண்ணை விட வடக்கு பகுதியில் வாசிப்பு பழக்கம் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் கூடுதலான வாசிப்பாளராக தமிழ் மக்களை விட இஸ்லாமிய மக்களே உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்ற பரிணாமம் என்னும் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தினசரி பத்திரிகை வெளிவரும் பின்னர் இல்லாமல் போகும். ஆனால் வடக்கு மாகாணத்தில் ஒவ்வொரு வருடத்தில் இரு பத்திரிகைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு என்ன காரணம் என ஆராய்கின்ற போது கிழக்கு மண்ணை விட வடக்கு பகுதியில் வாசிப்பு பழக்கம் அதிகமாக உள்ளதுடன் ஆர்வமும் காரணமாகும். புள்ளி விபரத்தின் படி கிழக்கு மாகாணத்தில் கூடுதலான வாசிப்பாளராக தமிழ் மக்களை விட இஸ்லாமிய மக்களே உள்ளனர். இதனை பத்திரிகை நிறுவனங்களும் கோடிட்டு காட்டுகின்றது.
எனவே வெறுமனே நாங்கள் பத்திரிகை வெளியிடுவதன் ஊடாக பரிணாமம் அடைவதோ அல்லதோ ஆரோக்கியமாக இருப்பதோ இல்லை. பத்திரிகையை கட்டிக்காக்கின்ற பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பலதை கடந்து நாம் இன்று வந்திருக்கின்றோம்.
முன்னைய காலத்தில் இருந்ததை போல, இப்பொழுது பத்திரிகையாளர்கள் வெள்ளை வாகனத்தில் கடத்தப்படுவதில்லை. சுடப்படுவதில்லை. எனினும், ஊடகவியலாளர்களிற்கு வேறுவிதமான நெருக்கடிகள் உள்ளன என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன், முசாரப் முதுநபீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.