விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான்.
பிள்ளையாரை போலிருந்ததால் எனக்கு பிள்ளையான் என்ற பெயர் வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில்,
நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போது குபேரன் என பெயர் வைத்தார்கள். பின்னர் நான்கைந்து பெயர் அதே பெயரில் இருந்ததால் என்னை பிள்ளையான் என அழைத்தனர். கட்டையாக, உருண்டையாக நான் இருந்தேன். அதனால் அந்த பெயர் வந்தது.
யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, வசதி படைத்தவர்கள் தமது சொத்துக்களை புலிகளிற்கு எழுதி கொடுத்துவிட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றார்கள். அங்கு, புலிகள் தமது சொத்துக்களை பறித்து விட்டார்கள் என இராணுவத்திடம் முறையிட்டார்கள். இந்த பொலிஸ் முறைப்பாட்டை வைத்து வெள்ளவத்தையில் வீடு வாங்கி குடியிருந்தார்கள். அல்லது வெளிநாட்டுக்கு சென்றார்கள்.
யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் திரும்பி வந்து அந்த சொத்துக்களை உரிமை கோருகிறார்கள் என்றார்.