அண்மையில் பதுளை, பசறை பேருந்த விபத்தில் பெற்றோர் உயிரிழந்து விட, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளை பொறுப்பேற்க தயாராக உள்ளதாக அம்பாறை வைத்தியசாலை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் அம்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் பசறையில் பேருந்து கவிழ்ந்து 200 அடி பள்ளத்தில் விழுந்ததில், 15 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு தம்பதியினரும் உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தையை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்ற சமயத்தில், தாயாரும் விபத்தில் சிக்கினார்.
அந்த தம்பதியினரின் மூன்று குழந்தைகளுள்ளன. பெற்றோரை இழந்து அந்த குழந்தைகள் தற்போது நிர்கதியாகியுள்ளன. வயது முதிர்ந்த பாட்டியின் பராமரிப்பில் தற்போது குழந்தைகள் உள்ளன.
தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் வஜிர ராஜபக்ஷவின் மனைவி, அம்பாறை காவந்திசா மகா வித்யாலயாவில் ஆசிரியராக உள்ளார். அவர்களிற்கு ஒரு குழந்தை உள்ளது.
மூன்று குழந்தைகளையும்ம் தன்னால் பொறுப்பேற்க முடியும் என்றும், மூன்று குழந்தைகளும் பிரிந்து போகாமல் ஒரே வீட்டில் வாழ்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைத்தியர் வஜிர ராஜபக்ஷ கூறுகையில்,
“இந்த மூன்று குழந்தைகளை தத்தெடுக்க யாராவது தேவை என்று ஒரு செய்தி வந்தது. இந்த மூன்று குழந்தைகளையும் தத்தெடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். இரவில் இதைப் பற்றி யோசித்து முடிவு செய்தேன். ஆனால் அந்த நேரத்தில் மனைவியிடம் சொல்லவில்லை.
மறுநாள் காலையில் எழுந்த என் மனைவி , பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகள் இருப்பதாக என்னிடம் சொன்னார். அதன் பின்னரே நான் எடுத்த முடிவை என் மனைவியிடம் சொன்னேன். எங்கள் சொந்த விருப்பப்படி இந்த மூன்று குழந்தைகளையும் தத்தெடுக்க முயற்சிக்கிறோம். ”
குழந்தைகளை பிரிக்காமல் தத்தெடுப்பது அவர்களின் மன வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு உதவ ஏராளமானவர்கள் இப்போது முன்வருகிறார்கள், ஆனால் மூன்று குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான நிதி வலிமை என்னிடம் இருக்கிறது. யாராவது குழந்தைகளுக்கு உதவ விரும்பினால், அவர்கள் மாவட்ட செயலாளர் அல்லது பிரதேச செயலாளர் மூலம் செய்யலாம் என்றார்.