கொட்டக்கலை பிரதேசசபை நிர்வாக பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டக்கலை சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு கடந்த 22 ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் இன்று வெளியாகியபோது இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதில் தலவாக்கலை பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் 6 மாணவர்களும் அடங்குவர்.
இவர்கள் கொட்டக்கலை பிரதேச பாடசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இரவு நேர வகுப்புக்கு சென்றுள்ளனர்.
இந்த ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இவர்கள் கொரோனா நோயாளியுடன் நெருங்கி பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று (24) புதன்கிழமை பிற்பகல் வெளியாகியபோது இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களின் குடும்பங்கள் சுயதனிமைக்கு உட்படுத்தபட்டுள்ளன. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-தலவாக்கலை பி.கேதீஸ்-