கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம்
அதிகாரிகள் இன்று (24) அகழ்வாராச்சியை மேற்கொள்ள முன்னெடுத்த
நடவடிக்கையினை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆலய வளாகத்திற்குள் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் காலெடுத்து வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் இன்று அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, நேற்று முன்தினம் தொடக்கம் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இன்று வட மாகாண தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அடங்கிய
குழுவினர் காலை 11 மணியளவில் உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு
அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள சமூகமளித்திருந்தனர்.
எனினும், பொது மக்கள் வீதியை மறித்து அவர்களை உள்ளே செல்ல விடாது கோசங்களை எழுப்பியவாறு தடுத்து நின்றதோடு, வரலாற்றை மாற்றாதே, மனங்களில் புத்தரை தேடு, மண்ணில் புத்தரை தேடாதே, எங்களது சிவன் எங்களுக்கு வேண்டும், போன்ற கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொலிசார் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்க முயற்சித்தனர்.
உருத்திருபுரம் சிவன் ஆலயத்திற்குரிய காணி உறுதியுடன் பொலிஸ் நிலையம் வருமாறு ஆலய நிர்வாகத்திற்கு பொலிசார் அறிவுறுத்தினர்.
இதேவேளை, தமது கடமைக்கு பொதுமக்கள் இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தொல்லபொருள் திணைக்கள வடபிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார்.



