அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் காணியை தாம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கவில்லையென அந்த காணியின் தற்போதைய உரிமையாளரான வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் காணியை யாழ்ப்பாண வர்ததகர் ஒருவர் அபகரித்ததாக, ஆனந்தசுதாகரனின் சகோதரி குற்றம்சாட்டியிருந்தார்.
அதை தமிழ்பக்கம் பிரசுரித்திருந்தது.
எனினும், தொடர்புடைய வர்த்தகர் தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்திருந்தார்.
அவரது தகவல்படி, 2002ஆம் ஆண்டிலேயே அந்த காணியை அவர் கொள்வனவு செய்து விட்டார். தற்போது ஆனந்தசுதாகரனின் பெயரை பயன்படுத்தி, காணி விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். எனினும், அந்த காணிக்கும் ஆனந்தசுதாகரனிற்கும் எந்த தொடர்புமில்லை, அந்த காணியை ஆனந்தசுதாகரனின் சகோதரியே உரிமை கோருகிறார். எனினும், முறைப்படி 2002ஆம் ஆண்டே காணியை நாம் கொள்வனவு செய்து விட்டோம் என்றார்.
2010ஆம் ஆண்டிலேயே காணியில் கட்டிடம் கட்டி விட்டேன்
அவர், சில குண்டர்களுடன் 2 நாட்களின் முன்னர் அங்கு வந்து, கனரக வாகனத்தை பயன்படுத்தி கட்டிடத்தை இடித்தார். அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் எமது பணியாளர்கள் அங்கு சென்றனர்.
இது குறித்து பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டோம். காணியை வாங்கியமைக்கான ஆதாரங்களை நாங்கள் சமர்ப்பித்தோம். பொலிஸ் நிலையத்தில் அவர்களால் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.
பின்னர் கிராமசேவகர், காணி உத்தியோகத்தர்கள் தலையிட்டு, ஆதாரங்களை.வழங்கினோம். எமக்கு அவர்கள் காணியை விற்ற ஆவணங்களும் உள்ளன. அனைத்தையும் ஆராய்ந்த காணி உத்தியோகத்தர், காணியின் ஆட்சியை நாம் மேற்கொள்ளலாமென அனுமதித்தார்.
இதன்பின்னர் புனரமைப்பு பணியை செய்தபோது, ஆனந்தசுதாகரனின் சகோதரி வந்து அடாவடியில் ஈடுபட்டார் என விளக்கமளித்தார்.