கிழக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக போட்டிப் பரீட்சை நடத்துவதற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆட்சேர்ப்பு செய்வதற்கும் எதிராக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக இன்று (22) உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இதுவரை, கிழக்கிலுள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தெரிந்தெடுத்ததாகவும், இம்முறை போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இம்முறை, ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நோக்கில், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இப்போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது.
அதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 03 மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேட்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதில் இடம்பெற்ற நுண்ணறிவு பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக போராட்டக்காரர்ள் குற்றம்சுமத்தினர்.
ஏனெனில், நுண்ணறிவு வினாத்தாளில் காணப்பட்ட 20க்கும் மேற்பட்ட வினாக்கள் பிரபல போட்டிப் பரீட்சை வளவாளரால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் எமக்கான தீர்வு வேண்டும் எனவும் பரீட்சாத்திகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு ஒரு வாரத்தின் முன்னரே வெளியானதாகவும், அது கல்முறை மற்றும் அம்பாறை பகுதிகளிலுள்ள முஸ்லிம் மாணவர்களிற்கு வட்ஸ்அப் வழியாக விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
கிழக்கில் 200 ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடம் உள்ள நிலையில்,
235 ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளிலிருந்து நியமனம் வழங்கப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி, மகஜர் கையளித்தனர்.