தமிழீழ விடுதலை விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் நேற்று (20) இடம்பெற்றது. இதன்போது, பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
கட்சியின் தலைமைக்குழு, அரசியல்குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் தற்போது 275 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், தற்போது 151 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்தியகுழுவில் 87 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், தற்போது 51 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தலைமைக்குழுவில் 27 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், தற்போது 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசியல்குழுவில் 9 பேர் அங்கம் வகிக்கும் நிலையில், தற்போது 7 பேராக குறைக்கப்பட்டுள்ளது.
இது யாப்பில் உள்ளடக்கப்பட்டு, அடுத்த மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படும்.
அத்துடன், கட்சியில் வெற்றிடமாக இருந்த தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அதுவும் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளர் பதவிக்கு கோவிந்தம் கருணாகரன், ஹென்ரி மகேந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதில் வினோநோகராதலிங்கம் போட்டியிலிருந்து விலக, கோவிந்தம் கருணாகரன், ஹென்ரி மகேந்திரன் போட்டியிட்டனர்.
இதில் வாக்கெடுப்பு நடைபெற்று, கோவிந்தம் கருணாகரன் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
அவர் இதுவரை வகித்து வந்த பொருளாளர் பதவிக்காக, வினோ நோகராதலிங்கம், விந்தன் கனகரட்ணத்தின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதில் வினோநோகராதலிங்கம் போட்டியிலிருந்து விலக, விந்தன் கனகரட்ணம் பொருளாளராக ஏகமனதாக தெரிவானார்.
அண்மையில் ரெலோ தலைமைக்குழு கூடி, 10 தமிழ் கட்சிகளின் கூட்டணி விவகாரத்தில் தீர்மானமொன்றை எடுத்தது. அதாவது, இந்த கூட்டு தேர்தல் கூட்டு அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றான இன்னொரு அணியை ஆதரிப்பதில்லையென. அந்த தீர்மானத்தை பொதுக்குழு அங்கீகரித்தது.
கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிய போது, அண்மையில் ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணையை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்க வேண்டுமென, பங்காளிகளின் கையொப்பத்தை அனுமதியின்றி பாவித்து இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
இந்த விவகாரத்தை கண்டித்தார்.