2022 உலகக் கோப்பையை நடத்தவுள்ள கட்டாரில் இடம்பெறும் மைதான அமைப்பு பணியில் 6,000 இற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை த கார்டியன் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்நாடுகளின் அரசாங்க தரவுகளை இந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
உலகக் கோப்பைக்கு தயாராகும் பணிகள் கட்டாரில் 2010 இல் கட்டாரில் ஆரம்பித்தன. இதன்ப பின்னர், வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்
மனித உரிமை மீறல்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டார் கையாளும் விதம் குறித்து- அவர்களை உழைப்புக்கு கட்டாயப்படுத்துகிறது- என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது.
த கார்டியன் பத்திரிகையின் செய்தியின் படி, 2,711 இந்திய தொழிலாளர்கள், 1,641 நேபாள தொழலாளர்கள், 1,018 பங்களாதேஷ் தொழிலாளர்கள், 824 பாகிஸ்தான் தொழிலாளர்கள் மற்றும் 557 இலங்கை தொழிலாளர்கள் 2010 முதல் கட்டாரில் இறந்துள்ளனர்.
கட்டார் 3 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடு. 2 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்குள்ளனர். கட்டாரில் அதிக தொழிலாளர்களை கொண்ட ஏனைய இரண்டு நாடுகள் பிலிப்பைன்ஸ் மற்றும் கென்யா ஆகியவையாகும்.
மின்சாரம் தாக்கம், உயரத்திலிருந்து விழுந்து, தற்கொலை போன்றவற்றால் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் தொடர்பான முறையான பிரதேச பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. பல மரணங்கள் இயற்கை காரணங்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இந்த விவகாரத்தில் கட்டாருடன் பேச எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.