இந்தியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி 30 கிலோமீற்றர் தூரமான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
சியாமளா கோலி (47), நேற்று (19) இலங்கையின் தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடியை பாக்கு நீரிணை ஊடாக 13 மணி 40 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார்.
இந்நிகழ்வை வட மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆரம்பித்து வைத்தார்.
பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த இரண்டாவது பெண்மணியாகவும் 13வது நீச்சல் வீரராகவும் சியாமளா கோலி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
தென்கொரியாவின் குவாஞ்சுவில் நடைபெற்ற 2020 FINA உலகளாவிய வீரர்களுக்கான சுற்றுப்போட்டியில் தெலுங்கானாவை பிரதிநிதித்துவப்படுத்தி சியாமளா கோலி பங்குபெற்றியிருந்தார். 2020 நவம்பரில் பட்னாவில் உள்ள 30 கிலோ மீட்டர் அகல கங்கை ஆற்றை 110 நிமிடங்களில் நீந்தி கடந்து ஆறாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
சியாமளா கோலி அனிமேஷன் பட தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என்ற பல்வேறு ஆளுமைகளை கொண்டிருக்கும் அதேவேளை நான்கு வருடங்களுக்கு முன்னர், நீச்சலில் ஈடுபட்டு வருகிறார். ஹைதராபாத் கசிபௌலி நீச்சல் தடாகத்தில் அவரது பயிற்றுவிப்பாளரான ஆயுஸ் யாதவின் வழிகாட்டலுடன் பாக்கு நீரிணையை கடப்பதற்கான நீச்சல் சவாலுக்குரிய பயிற்சிகளை அவர் பெற்றிருந்தார்.
பாக்கு நீரிணையை நீந்தி கடக்கும் சாதனையானது சகல பெண்களுக்குமான ஒரு பாரிய சாதனையாக பதியப்படும் என தெரிவித்துள்ள சியாமளா கோலி, பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதனையும் பெண்கள் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கும் இவ்வாறான விடயங்கள் துணையாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.