தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. ரெலோவின் அதிருப்தி அணி, இன்று கட்சியிலிருந்து வௌியேறும் அதிரடி முடிவை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
ரெலோவிற்குள் புதிதாக வந்த சிறு குழுவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, மூத்த உறுப்பினர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அந்த புதிய அணியின் கட்டுப்பாட்டிலேயே கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இயங்குவதால், அவரால் கட்சியை கட்டிக்காக்க இயலாமல் போயுள்ளதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தனக்கு நெருக்கமானவர்களிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை கொடுப்பதாக செல்வம் அடைக்கலநாதன் மீது அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். உதாரணமாக, சுரேன் குருசாமியை தேசிய அமைப்பாளராகவும், பேச்சாளராகவும் செல்வம் அடைக்கலநாதன் நியமித்துள்ளார்.
கிழக்கில் ஹென்ரி மகேந்திரன், வடக்கில் விந்தன் கனகரட்ணம் என அதிருப்தியாளர்கள் பட்டியலில் பலர் உள்ளனர். பல வெளிநாட்டு கிளைகளும் இந்த பட்டியலில் உள்ளன.
கட்சியின் செயலாளர் பதவி உள்ளிட்ட வெற்றிடமாக உள்ள பதவிகளிற்கு இன்று நியமனங்கள் இடம்பெறவுள்ளன.
சில வருடங்களின் முன்னர் கட்சி செயலாளர் தெரிவு இடம்பெற்ற போது, கோவிந்தம் கருணாகரனும், ஹென்ரி மகேந்திரனும் போட்டியிட்டனர். அப்போது பெரும் கொந்தளிப்பான நிலைமை உருவாகி, இருவரில் யாராவது ஒருவருக்கு அந்த பொறுப்பை கொடுத்தாலும் நிலைமை மோசமாகும் என்பதால், என்.சிறிகாந்தாவிற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
இப்பொழுதும் பொதுச்செயலாளர் பதவிக்கு இருவரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
கட்சியின் அதிருப்தியணியினர் இன்று பதவிகளை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. சுரேன் குருசாமிக்கு தேசிய அமைப்பாளர், பேச்சாளர் என இரண்டு பதவிகளையும் அங்கீகரித்தால், செயலாளர் பதவியும் அதிருப்தியாளர் தரப்பிற்கு வழங்கபபடா விட்டால்- கட்சிக்குள்மறுசீரமைப்பு நடக்காவிட்டால், இன்று அதிருப்தியாளர் அணி தமது முடிவை பகிரங்கமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.