மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி சுரவணையடியூற்று பகுதியில் வீதியருகில் உள்ள பள்ளமொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (19) காலை மீட்க்கப்பட்டுள்ளது.
சுரவனையடியுற்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் கனகரத்தினம் தில்லைநாதன் (6) என்ற ஐந்து பிள்ளைகளின தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடியில் இருந்து இரவு வேளையில் துவிச்சக்கரவண்டியில் வந்து கொண்டிருக்கும் போது வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் தவறுதலாக விழுந்து குடும்பஸ்தர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை விவசாயிகள் வயலுக்குச் செல்லும் போதும் சடலத்தை கண்டு உறவினர்களிடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் குறித்த சடலம் தொடர்பிலான மரண விசாரணையை தொடர்ந்து சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.