மட்டக்களப்பு மாநகர சபை அமர்வானது சபைச் செயலாளர் இல்லாமையால் ஒத்தி வைத்தாக மாநகர முதல்வரால் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன் எந்தவித ஆதாரமற்ற செய்தியாகும். எனவே இதனை வன்மையாக கண்டிப்பதாக மாநகர சபை ஆணையாளர் மாணிக்கவாசம் தயாபரன்
தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 45 வது அமர்வானது நேற்று வியாழக் கிழமை (18) நடைபெற இருந்த வேளை சபையின் செயலாளர் சமுகமளிக்காமை காரணமாக சபை ஒத்தி வைக்கப்பட்டதாக முதல்வரினால் ஊடகங்களில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆணையாளரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆணையாளர் இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இதுரைக்கும் மட்டடக்களப்பு மாநகர சபைக்கென சபை செயலாளர் நியமனம் செய்யப்படவில்லை. இந் நிலையில் நிருவாக சேவை தரம் இரண்டைச் சேர்ந்த ஒருவரை நியமித்து தருமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். எனினும் மடக்களப்பு மாநகர சபையில் குறிப்பிட்ட சில காலங்களாக முகாமைத்து சேவை தரம் ஒன்றைச் சேர்ந்த ஒருவரே பதில் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
இதற்கமைய நேற்று வியாழக்கிழமை மாநகர சபையின் 45 வது அமர்விற்கு முகாமைத்துவ சேவை விசேட தரத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் செயலாளராக கடமைபுரிவதற்கு என்னால் நியமிக்கப்பட்டிருந்தார். அதுமாத்திரமின்றி அவருக்கு உதவியாக குறிப்பெடுப்பதற்கும் மேலும் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட இருவரும் சபைக்கு சமுகமளித்திருந்த போதும் இந்த விடயத்தை நன்கு அறிந்திருந்த முதல்வர், சபையை வேண்டுமென்றே ஒத்திவைத்து விட்டு சபை செயலாளர் சபைக்கு சமுகமளிக்காத காரணத்தால் சபையை தற்காலிகமாக ஒத்திவைத்தி வைப்பாதாக சபையில் அறிவித்தமை சட்டத்திற்கு முரணானதும் உண்மைக்கு புறம்பான எவ்வித ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டாகும்.
இதனை ஊடகங்களோ பொதுமக்களோ தகவலறியும் சட்டம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என நான் கூறிவைக்க விரும்புகின்றேன். எனவே முதல்வரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.
-பழுகாமம் நிருபர்-