நேற்று ஒத்திவைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 45வது சபை அமர்வு இன்று (19) மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
நேற்றைய சபை ஒத்திவைப்பு விவகாரத்தில் மாநகரசபை ஆணையாளரும், முதல்வரும் மாறி மாறி குற்றம் சுமத்தியிருந்தனர்.
மாநகர பிரதி ஆணையாளர் அல்லது நிருவாக உத்தியோகத்தரைப் பதில் செயலாளராக நியமித்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்ளுராட்சி ஆளையாளர் விடுத்த அறிவுறுத்தலிற்கடைய, இன்றைய சபை அமர்வு மாநகரசபையின் நிருவாக உத்தியோகத்தரை பதில் செயலாளராக நியமித்து இடம்பெற்றது.
இதன்போது நேற்றைய தினமும் நிருவாக உத்தியோகத்தர் மாநகரசபைக்கு வருகை தந்திருந்தார். அவரைப் பதில் செயலாளராக நியமித்து கூட்டத்தை நடாத்தியிருக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர் திலிப் கேள்வியெழுப்பினார்.
மாநகர முதல்வர் பதிலளிக்கையில், மாநகரசபையில் செயலாளர் நியமிக்கப்படாததன் காரணமாக மாநகர ஆணையாளரே இதுவரை பதில் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளார். நேற்யை அமர்வின் போது அவர் மாநகர சபைக்குச் சமுகமளித்திருந்தும் அமர்வுக்கு சமுகமளிக்கவில்லை. அவ்விடயத்தை அவர் முன்கூட்டி அறிவிக்கவும் இல்லை, பதில் ஒருவரை அவர் நியமிக்கவும் இல்லை. அவ்வாறிருக்கையில் நாம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. எனவே செயலாளர் இல்லாமல் சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உகந்ததல்ல என்ற நியமத்தின் அடிப்படையில் சபையை ஒத்தி வைத்து, உள்ளுராட்சி ஆணையாளருக்குக் குறித்த விடயம் அறிவிக்கப்பட்டு அவரின் ஒப்புதலின் அடிப்படையில் பதில் செயலாளர் ஒருவரை நியமித்து இன்றைய அமர்வு நடாத்தப்படுகின்றது என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் வழமை போல் சபைச் சம்பிரதாயங்களுடன் சபை அமர்வு நடவடிக்கைளில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாத கால செயற்பாடுகள் குறித்து முதல்வரால் தெளிவுபடுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வரின் சிபாரிசுகள் மற்றும் நிதிக் குழுவின் சிபாரிசுகள் சபையில் முன்வைக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் சபை அமர்வுகள் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.