காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் உள்நோக்கங்களுடன்
செயற்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு உள்நோக்கங்களுடன் செயற்படுகின்ற எனவே அவர்கள் அதற்கேற்றவாறே
செயற்படுவார்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் சந்திக்கவுள்ளதாக
அறிவித்திருந்த நிலையில் தாம் அமைச்சரை சந்திக்கவிரும்ப வில்லை என
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இது
தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒவ்வொரு உள்நோக்கங்களுடன் செயல்படுகின்றன. எனவே அவர்கள் அதற்கேற்ற மாதிரியே செயற்படுவார்கள்.
நான் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று யோசிக்கின்றேன். அவர்கள் பிரச்சினையை
தீராப் பிரச்சினையாக வைத்திருக்க யோசிக்கின்றார்கள். காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு கடந்த முறை நான் அழைப்பு
விடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் வந்து சந்தித்தார்கள். பின்னர் அச் சந்திப்புக்களை அரசியல் சூழ்நிலையால் தொடர முடியவில்லை. தற்போது நான்
அதனை திருப்பி தொடர்கின்றேன்.
நான் சங்கங்களுக்கு அழைப்பு விடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கே அழைப்பு
விடுத்துள்ளேன். அவர்களை நான் வலிந்து அழைக்கவுமில்லை. எனவே அவர்கள்
விரும்பினால் வந்து சந்திக்கலாம்.
எனக்கும் அந்த பாதிப்புக்கள் உண்டு. எனது தம்பி மற்றும் நெருக்கமானவர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு யார் பொறுப்புக் கூறுவது. எனது அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.