கொரோனா தொற்று பல ஆண்டுகளாக தொடர்ந்தால் அது பருவகால நோயாக உருவாகும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.18 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 12,18,00,403 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,81,95,564 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26 இலட்சத்து 69 ஆயிரத்து 725 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,09,13,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88,874 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும் இந்த நோய் பரவுவது குறித்து இன்னும் பல மர்மங்கள் சூழ்ந்துள்ளன.
கொரோனா பரவலில் வானிலை மற்றும் காற்றின் தர தாக்கங்களை ஆய்வு செய்வதன் மூலம் அந்த மர்மங்களில் ஒன்றை வெளிச்சம் போட விஞ்ஞானிகள் குழு ஒன்று முயற்சி செய்துள்ளது. அந்த குழுவின் முதல் அறிக்கையில், இந்த நோய் பருவகால அச்சுறுத்தலாக உருவாகும் என்பதற்கான சில அறிகுறிகளைக் கண்டறிந்து உள்ளது.
ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு அமைத்த 16 பேர் கொண்ட குழு சுவாச வைரஸ் தொற்று பெரும்பாலும் பருவகால நோயாக உருமாறும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குறிப்பாக இலையுதிர்-குளிர்கால உச்சநிலை இன்ஃப்ளூயன்ஸா மற்றும் மிதமான காலநிலைகளில் கொரோனா வைரஸ் பரவும். இது பல ஆண்டுகளாக நீடித்தால், கொரோனா ஒரு வலுவான பருவகால நோயாக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளை தூண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ்-2 போன்ற வைரஸ்கள் காலப்போக்கில் பருவகால நோயாக மாறக்கூடும்.
தொற்றுநோயின் முதல் ஆண்டில், சில இடங்களில் நோய்த்தொற்றுகள் கோடை பருவங்களில் உயர்ந்தன, வரவிருக்கும் ஆண்டில் இது மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வெளிப்புற வானிலை மற்றும் காற்றின் தர நிலைகளில் மட்டுமே கவனம் செலுத்திய நிபுணர் குழு குளிர், வறண்ட வானிலை மற்றும் குறைந்த புற ஊதா கதிர்வீச்சு இருக்கும்போது வைரஸ் நீண்ட காலம் உயிர்வாழும் என கண்டறிந்து உள்ளது.மோசமான காற்றின் தரம் கொரோனா இறப்பு விகிதங்களை அதிகரிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.