கல்லோயா ஆற்றுப்பிரிவின் 2021ஆம் ஆண்டின் யல போகத்திற்கான கால அட்டவணையும் நிறைவேற்று தீர்மானங்கள் நிறைவேற்றும் கூட்டமும் நேற்று (17) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌஷாத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல்.எம். ஹனிபா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எம். நஸீர், விவசாய திணைக்கள உயரதிகாரிகள், மற்றும் உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதானிகள், அம்பாறை மாவட்ட விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் ஆரம்ப வேலைகளுக்கான காலம், விதைப்புக்காலம், விதைக்கும் நெல்லினம், பயிர்க் காப்புறுதி, நீர் விநியோகம், மாடுகளின் அப்புறப்படுத்துகை, கிளை வாய்க்கால் பேணுகை, தந்தங்கள், கூலிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 12 கண்டங்களில் 4738 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.