போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் பெயரை பொலிசார் கேட்ட போது, “பிள்ளைகளை கொண்டு வாருங்கள் பெயரை கூறுகிறோம். இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்பதே எமது பெயர்“ என பதிலளித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்று(17) 15வது நாளாகவும் சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் தொடர்கிறது.
முற்பகல் 10, மணிக்கு அந்த இடத்தில் சென்ற பொலிசார், அங்கிருந்த தாய்மார்களிடம் உங்கள் பெயர் என்ன என ஒவ்வொருவராக பார்த்து வினவினர்.
அதற்கு பதிலளித்த தாய்மார்கள், “ காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கொண்டு வாருங்கள். பெயர்களை தருகிறோம். இப்போது எங்கள் பெயர்கள் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்மாக்களும் மனைவிகளும்” என்பதுதான்“ என்றார்கள்.
இந்த பதிலை எதிர்பாராத பொலிசார், அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
இதேவேளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரெழுச்சி இயக்கத்தின் ஆதரவில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.