கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய (WCT) ஒப்பந்தத்தில் இந்தியாவின் அதானி நிறுவனம் 51% பங்குகளை கொண்டிருக்குமென்பது தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனம் நேற்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் லிமிடெட் நிறுவனம் (APSEZ) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகங்கள் மற்றும் தளவாட நிறுவனமும், பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் முக்கிய துணை நிறுவனமுமாகும்.
இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சிடமிருந்து, ஒப்பந்தம் குறித்த கடிதத்தை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை என்பவற்றுடன், மேற்கு முனைய பங்கை அதானி குழுமம் பகிர்ந்து கொள்கிறது.
அரச- தனியார் கூட்டு அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் 35 வருடங்களிற்கு செல்லுபடியாகும் மேற்கு கொள்கலன் முனையம், 1400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழத்துடன், அல்ட்ரா லார்ஜ் கன்டெய்னர் கேரியர்களைக் கையாளத்தக்க பிரதான போக்குவரத்து சரக்கு இடமாக மாறும் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.