இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடை விதிக்க முன்மொழிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது விவாதத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு அடிப்படையில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் ஒரு பரந்த உரையாடலைத் தொடங்கும் என்றும் தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளவும் ஒருமித்த கருத்தை எட்டவும் போதுமான நேரம் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.