தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அன்பான தமிழ் மக்களே,
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் பங்குனி 17ம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பங்குனி 19ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கீழ்வரும் பிரதான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
1. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்.
2. தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்குமாறு மதத்தலைவர்கள், தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.