தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 1,000 ரூபா சம்பள உயர்வு சலுகை அந்த மக்களுக்கு கிடைப்பதை தாமதப்படுத்தவே சம்பள உயர்வுக்கு எதிராக தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். ஆனால் நீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டுமென்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஏதும் சிக்கல் நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்தாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார். நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
2015 இல் 1,000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் எமது அரசாங்கமே அதனை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தது. இதற்காக 12 சுற்று பேச்சு நடத்தப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்குமிடையில் உடன்பாடு எட்ட முடியாமல் போனதால் வர்த்தமானி அறிவிப்பினூடாக 1,000 ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.இதற்கு எதிராக தோட்டக் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன.தோட்டங்களின் உரிமை அரசுக்கே இருக்கிறது.குத்தகைக்கே அவை வழங்கப்பட்டுள்ளன. வழக்குத் தாக்கல் செய்து காலங்கடத்துவதே கம்பனிகளின் நோக்கமாகும்.வழக்கு விசாரணை முடிய பல வருடங்கள் செல்லும். இதற்கு மாற்று வழிகளை அரசு எடுக்கும் என்றார்.