தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாங்கள் நிச்சயமாக அபிவிருத்தி சார்நத வேலைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்களுடைய பிரதேசங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். என மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நீர்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்ளப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமுன்மாரிசோலையில் பதினெட்டு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள அணைக்கட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர்.ஆர்.இராகுலநாயகி,தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் போராதிவுப் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சா.வியாளேந்திரன், அபிவிருத்தி குழுவின் உப தலைவர் ப.சந்திரகுமார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகரன், மற்றும் பொறியிலாளர்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் தானும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உண்மையில் இந்த புதுமுன்மாரிசோலை அணைக்கட்டு திட்டமானது பதினெட்டு மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படுவது வரவேற்கத்தக்க விடயம் ஒன்றாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாங்கள் நிச்சயமாக அபிவிருத்தி சார்நத வேலைகளுக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுடைய பிரதேசங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவேதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை மக்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்தி சார்நத கட்சியில் இருந்தும், இரண்டுபாராளுமன்ற உறுப்பினர்களை உரிமை சார்ந்த கட்சியில் இருந்தும் தெரிவு செய்துள்ளனர். உண்மையில் இவ்வாறான திட்டங்களை அரசாங்கம் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்குமாக இருந்தால் நாங்கள் எந்தவெரு இடத்திலும் தடையாக இருக்கமாட்டோம்.
மாவட்டத்திற்கு நீர்ப்பாசனம் தொடர்பான அபிவிருத்தி முக்கியமான விடயமாகும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மாவட்டங்களுக்கு சமனாக பிரிக்கப்பட வேண்டும். காரணம் இவ்வாறாக அபிவிருத்திக்கு வரும் பணங்கள் நாங்கள் கட்டும் வரியில் இருந்து வருவதேயாகும். இருந்தாலும் எமது மாவட்டத்தினை முன்னிலைப்படுத்தி செய்வதற்கு எமது இராஜாங்க அமைச்சர் முன்னிண்டு செயற்படுவார் என நான் நினைக்கின்றேன்.
குறிப்பாக இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு நாங்கள் நன்றிகூற வேண்டும். பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தாந்தாமலை பிரதேசத்தில் இராணுவத்தினால் அபகரிக்கப்படவிருந்த 1500 ஏக்கர் காணிகளை தடுத்து நிறுத்துவதற்குரிய தீர்மானத்தை அபிவிருத்திக் குழு தலைவர் என்ற ரீதியில் எடுத்துள்ளார். இவ்வாறாக நீங்கள் எமது உரிமைசார்ந்த விடயத்தில் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் நாங்களும் உங்களுக்கு அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் நிச்சயமாக உதவியாக இருப்போம். எந்தவொரு இடத்திலும் நாங்கள் தடையாக இருக்கமாட்டோம் எனவே இந்த அரசாங்கம் இப் பிரதேசங்களில் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அவர்களின் கடமை என்பதனை அரசாங்கமும் உணரவேண்டும். இது எங்களுக்கு அரசாங்கத்தால் எங்களுக்கு கிடைக்கும் பரிசல்ல
மாறாக இன்று அரசாங்கத்தை பார்த்தால் தொல்பொருள் திணைக்களம் ஊடாக காணி அபகரிப்பு, வன இலாக ஊடாக காணி அபகரிப்பு, மகாவலி அதிகார சபையை வைத்து காணி அதிகரிப்பு, இவ்வாறு பல வழிகளின் ஊடாக காணிகளை அபகரிக்கின்ற வேலைத்திட்டங்களைஎமது மாவட்டத்தில் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான விடயங்களை நிறுத்திவிட்டு அபிவிருத்தி சார்ந்த விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில் எமது ஒத்துழைப்பு என்றும் உண்டு என இதன்போது தெரிவித்தார்.
-பழுகாமம் நிருபர்-