ஆந்திராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது.
ஆந்திராவில் விசாகப்பட்டிணம், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 75 நகராட்சி மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று முழுமையான முடிவகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 80% அளவுக்கு முழுமையான வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்கு தள்ளி பெரும் வெற்றி பெற்றது. முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்திற்குட்பட்ட பகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 671 வார்டுகளில், 425 வார்டுகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. 91 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கு தேச கட்சி 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜேஎஸ்பி 7, சிபிஎம் 2, சிபிஐ 1 மற்றும் பாஜக. 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் 12 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளை கைப்பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் சாதனை புரிந்துள்ளது. ஒரு மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளை பொறுத்தவரை 75 நகராட்சிகளில் 73 நகராட்சிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இரண்டு நகராட்சிகளை தெலுங்குதேசம் கைப்பற்றியுள்ளது.
இத்தேர்தலில் பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதேபோல ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியில் இறங்கியது. ஆனால் மாநகராட்சி தேர்தலில் ஒரே ஒரு வார்டில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் எதிலும் வெற்றி பெறவில்லை.