மலேசியாவில் கிறிஸ்தவர்கள் தங்கள் இறை வழிபாட்டின்போதும் சமய நூல்களிலும் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமயம் தொடர்பாக அல்லாஹ் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது.
இந்நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது.
கிறிஸ்தவ சமயப் பதிப்புகளில் கல்வி நிமித்தம் மூன்று சொற்களைப் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காபா (மெக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலம்), பைத்துல்லா (வழிபாட்டுத் தலம்), சோலாட் (வழிபாடு) ஆகிய சொற்களை கிறிஸ்தவர்கள் தங்கள் சமயப் பதிப்புகளில் பயன்படுத்தலாம்.
பல நூற்றாண்டுகளாக இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாக மலேசிய கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த கிறிஸ்தவர்களுக்கு அனுமதி தந்தால் பொதுமக்களிடையே குழப்பமும் கலகமும் ஏற்படும் என்று சில முஸ்லிம் தலைவர்கள் வாதிட்டனர்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மலேசிய அரசாங்கம் தகவல் வெளியிடவில்லை.