மியான்மரின் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சருக்கு, பிம்ஸ்டெக் மாநாட்டுக்கான அழைப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன விடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மர் இராணுவ அரசாங்கத்தின் அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், அந்த அரசாங்கத்தை இலங்கை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மர் அமைச்சரை அழைத்தமைக்கு பதிலாக, மியான்மரில் இராணுவமயமாக்கலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தற்போது வெளியேற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் சஜித் வலியுறுத்தினார்.
மியான்மரில் நடக்கும் கொடூரங்களிற்கு ஒப்புதல் அளிக்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தனாவின் நிலைப்பாட்டின் அறிகுறி இந்த கடிதமா என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போரில் மியான்மர் பல உயிர்களை இழந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மியான்மர் பிரதிநிதியை பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்க இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு நெறிமுறை உரிமை இல்லை என்றும், இதுபோன்ற செயல்கள் குழந்தைத்தனமானவை என்றும் குறிப்பிட்டார்.
ஒரு ஜனநாயக அரசாங்கமாக மியான்மரில் இராணுவமயமாக்கப்படுவதைக் கண்டித்து ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடுமாறு அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.