வீர வசனம் பேசும் மக்கள் பிரதிநிதிகள் எங்கே? அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எங்கே? என மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை பொலீசார் இரவோடு இரவாக அகற்றிய நிலையில் பாதிக்கப்பட்ட உறவுகள் நடு வெயிலில் இருந்து தங்களது சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த போராட்டம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எந்த வித கவனமும் செலுத்தாது பாராமுகமாக இருந்துவருவது குறித்து தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை புறக்கணித்தார்களா பாராளுமன்ற உறுப்பினர்கள்?
கடந்த எட்டு நாட்களாக மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரி நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் புறக்கணித்து வந்த நிலையில் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் நான்காம் நாள் போராட்டத்தில் மதியம் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்தார்.
அவரிடம் ஊடகவியலாளர்கள் போராட்டம் குறித்து கருத்து கேட்டபோது “கூட்டமைப்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் மாவட்டத்தில் நடக்கும் மக்கள் போராட்டம் என்ற வகையில் நான் இங்கு வந்துள்ளேன். கூட்டமைப்பாக முடிவெடுத்த பின்னர் அனைவரும் கலந்து கொள்வோம்“ என கூறி விட்டு சென்றார்.
இதேவேளை அன்றைய தினம் காலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் நான்கு நாட்களை கடந்துள்ள நிலையிலும் நீங்கள் அந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பின்வருமாறு பதில் கூறினார்.
“நான் கடந்த நான்கு நாட்களாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்து கொள்ள சென்றதால் நேரம் கிடைக்கவில்லை. இன்னும் நான் திருகோணமலைக்கு அவசரமாக செல்ல உள்ளதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.ஆனால் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்” என கூறினார்.
எனினும், அவரிடம் தொலைபேசியில் ஏற்பாட்டாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் வர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.