பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்கள் அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருள்களை தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக நேற்றிரவு ஆலயத்துக்கு சென்றிருந்த நிலையில் இந்தப் பாதக செயலை கும்பல் நடத்தியுள்ளது.
“வீட்டில் மூவர் வசிக்கின்றனர். அவர்கள் மூவரும் நேற்றிரவு ஆலயத்துக்குச் சென்றுள்ளனர். அதிகாலை வீடு திரும்பிய போது அங்கு சேதமாக்கியிருந்தமையை அவதானித்தனர்.
வளர்ப்பு நாய் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. புறாக் கூடு சேதப்படுத்தி புறாக்கள் சில கொலை செய்யப்பட்டிருந்தன.
வீட்டில் பெறுமதியான பொருள்கள் அடித்துச் சேதப்படுத்தியிருந்தன என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடம்பெற்ற வீட்டில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தப் படுபாதகச் செயலுக்கான பின்னணி தொடர்பில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.