விபஸ்ஸன தியான மத்திய நிலையத்தின் விகாராதிபதி உடுதும்பர காஷ்யப தேரரின் டெயோட்டா சொகுசு காரை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை (9) இரவு 7.15 மணியளவில் தலவத்துகொட இலங்கை வங்கிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த போது, கலல்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரால் குறித்த கார் திருடப்பட்டது.
திருடப்பட்டு சுமார் அரை மணித்தியாலத்திற்குள் கார் மீட்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலல்கொட கிராமோதய மாவத்தையில் அது மீட்கப்பட்டுள்ளது.
காரை பொலிஸார் கைப்பற்றிய போது அதில் இலக்கத் தகடு அகற்றப்பட்டிருந்ததோடு, ஜி.பி.எஸ். கருவியை அகற்றுவதற்கு பதிலாக வாகனத்தின் பிறிதொரு பகுதியும் அகற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட காரின் பெறுமதி 70 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.