மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள மஹா சிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை முதல் ஆலையத்தை சூழ்ந்த பகுதிகளில் புகையூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா கொத்தணி உருவாகாமல் இருப்பதற்காக மன்னார் சுகாதாரத் துறையினரின் சுகாதார ஆலோசனைக்கு அமைவாக திருக்கேதீச்சர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.
சுமார் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். மேலும் சுகாதார துறையினர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு சுகாதார நடைமுறைகளை பின் பற்ற வேண்டியமை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
மேலும் பாலாவியில் நீராடுவது , தீர்த்தம் எடுப்பதும் , அங்காடி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார துறையினரால் தடை செய்யப்பட்டுள்ளது.
திருவிழா பூஜை ஒழுங்குகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் திருப்பணிச் சபையினர் ஆலய சிவாச்சாரியார்கள் சிவ தொண்டர்கள் இணைந்து மேற் கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திருக்கேதீஸ்வர ஆலய பகுதியில் விசேட சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.