காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு வடக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துக் கொண்டு பொறுப்பான அதிகாரிகள் அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு வடக்கில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு அதிகாரியொருவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, தமக்கு அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகவும், மேலிட உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைத்ததாக தெரிவித்தார்.
1972ஆம் ஆண்டு காணிச்சீர்திருத்த ஆணைக்குழு நிறுவப்பட்டு, 50 ஏக்கரிற்கு அதிகமான காணியுடையவர்களிடமிருந்து காணிகளை அரசு பொறுப்பேற்றது. இப்படியாக பொறுப்பேற்கப்பட்ட காணிகள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் இருந்தது. கிளிநொச்சி பளை பகுதியில் சுமார் 3,000 ஏக்கர் காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ளது.
இந்த காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கு வழங்குவதற்கும் ஆவணங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு, காணி ஆவணங்களை அநுராதபுரத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர்.
ஆவணங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கடந்த வாரம், யாழ் மாவட்ட செயலகத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.