தனக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் அவர் பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது. ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை மாறிக் கொண்டே இருக்கிறார். இந்நிலையில் தான் கீர்த்தியின் திருமணம் குறித்து மீண்டும் தகவல் வெளியானது.
கீர்த்திக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது, அவர்களுக்கு விரைவில் திருமணம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
என் திருமண செய்தியை பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எங்கிருந்து தான் இது போன்ற தகவல் எல்லாம் வெளியாகும் என்றே தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை, அதற்கு நேரமும் இல்லை. என்னை பற்றி வதந்தி பரப்புவதை விட்டுவிட்டு வேறு ஏதாவது நல்ல காரியம் செய்யலாம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கீர்த்தியும், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தும் காதலிக்கிறார்கள் என்று பேச்சு கிளம்பியது. அதன் பிறகு அவர்களுக்கு இந்த ஆண்டே திருமணம் என்று கூறப்பட்டது. கடைசியில் பார்த்தால் அது எல்லாம் வதந்தி. அனிருத்துக்கும், கீர்த்திக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, அவர்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அனிருத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தான் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் கீர்த்தி. அதில் இருந்து தான் அவர்கள் காதலிப்பதாக பேசத் துவங்கினார்கள்.
அதற்கும் முன்பு கேரளாவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை கீர்த்தி திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. என் மகள் பற்றி அவ்வப்போது திருமண செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது என்று கீர்த்தியின் அப்பா சுரேஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். கீர்த்தி தற்போது மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தில் நடிக்கிறார். மேலும் செல்வராகவனுடன் சேர்ந்து சாணி காகிதம் படத்தில் நடித்து வருகிறார்.