தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கேட்டால் இனவன்முறைகளையும், இனவழிப்புகளையுமே அரசு வழங்கியது. தற்போது ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து கோரியதற்கு, இரணைத்தீவில் சடலங்களைப் புதைக்கலாம் என்று அங்கு வாழும் மக்களுக்கு மேலுமொரு பிரச்சினையை உருவாக்கி சமூகங்களைப் பிரித்தாளுவதையே நோக்காகக் கொண்டு அரசு செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை ஆட்சியாளர்களுக்கு இல்லாததாலேயே பிரச்சினை சர்வதேசம் வரை நீண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக ரீதியாக அகிம்சை வழிமுறையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு அரசிடம் கோரினால், இனவன்முறைகள், இனவழிப்புகளைப் பதிலாக அரசு கொடுத்தது. தற்போது ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு தமிழ் பேசும் மக்கள் கோரியதற்கு, இரணைத்தீவில் சடலங்களைப் புதைக்கலாம் என்று அங்கு வாழும் மக்களுக்கு மேலுமொரு பிரச்சினையை அரசு உருவாக்கியுள்ளது. சமூகங்களைப் பிரித்தாளுவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.
தேசிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுகளாகவே உள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதெல்லாம் ஓரினத்திற்குச் சாதகமான ஓசையாகவே இருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 73 ஆண்டுகளாக சிங்கள அதிகார வர்க்கமே ஆட்சி செய்கிறது. நாட்டில் அபிவிருத்தியோ, அமைதியோ ஏற்படவில்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவுமில்லை. உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை ஆட்சியாளர்களுக்கு இல்லாததாலேயே பிரச்சினை சர்வதேசம் வரை நீண்டுள்ளது.
சண்டித்தனத்தால் பிரச்சினைகளை உருவாக்கலாம் ஆனால் சமாதானத்தை உருவாக்க முடியாது. சாணக்கியம், சாதுரியம், மனித நேயம் என்பவற்றால் தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இந்த நாடு மியன்மாரின் இராணுவாட்சித் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? இல்லை தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் ஜனநாயகத் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? என்பது தான் எனது கேள்வியாகும் என்று தெரிவித்துள்ளார்.