மூன்று வயது மகஸ்ளுடனிருந்த பெண்ணொருவரைத் தரையில் தள்ளியதுடன் அவர் மீது மிளகுத் தூளை தெளித்த சம்பவம் ஒன்று காணொளியாக வெளிவந்துள்ளதை அடுத்து நியூயோர்க்கின் ரோச்சஸ்டர் நகரத்து பொலிசார் மீண்டும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதே ரோச்சஸ்டர் பொலிசார் மிகக் கடுமையாக நடந்துகொண்டுள்ளதாக அண்மைய மாதங்களில் இரு வேறு சம்பவங்கள் காட்டியுள்ளன. பெப்ரவரி 22ஆம் திகதியன்று நடந்த சம்பவத்தைக் காட்டும் காணொளி சென்ற வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
காணொளியில் தம் மகளை ஒரு கையில் தூக்கியவாறு நடந்து சென்ற பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி, அவர் திருடியதாக, அருகிலுள்ள வர்த்தக நிலையத்தினர் முறைப்பாடு செய்திருப்பதாக கூறினார்.
தாம் திருடவில்லை என்று மறுத்த பெண், அதிகாரியிடம் தமது பணப்பையைச் சிறிது திறந்து காட்டவும் முற்பட்டார். அவர் அங்கிருந்து நகர முற்பட, பொலிசார் தொடர்ந்து தடுத்த நிலையில், திடீரென்று கையில் பிள்ளையுடன் இருந்த அந்த பெண் திரும்பி ஓட்டம் பிடித்தார்.
அதிகாரிகள் பலர் அவரைத் துரத்தினர். அவரைப் பிடித்துத் தரையில் தள்ளினர். அலறிக்கொண்டிருந்த மகளைப் பிடிப்பதற்காக அந்தப் பெண் மீண்டும் எழ முயற்சி செய்தபோது பொலிசார் ‘பெப்பர் ஸ்பிரே’யை அவர்மீது அடித்துத் தரையில் தள்ளினர். சம்பவ இடத்தில் இருந்த குழந்தை மீது மிளகு நேரடியாகப் படாவிட்டாலும் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று காணொளியைப் பார்த்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொதுமக்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ரோச்சஸ்டரின் பொலிசார் பொறுப்பேற்பது தொடர்பான வாரியம், வெளியிட்ட இக்காணொளி தங்களை வெகுவாகப் பாதித்துள்ளதாக தெரிவித்தது. முன்னதாக ஒன்பது வயது சிறுமிக்கு விலங்கிட்டு இதேபோல் பெப்பர் ஸ்பிரே அடித்ததைக் குறிப்பிட்ட கழகத் தலைவி ஷனி வில்சன், இரண்டு சம்பவங்களுக்கும் இடையே மக்களுக்குக் கலக்கம் அளிக்கும் வகையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.